கடைவிழியால் சிறையெடுத்தாள்

 

கும்பகை இயற்கை அன்னையின் அழகில் விளைந்த நாடு.தாரகை ஆறும், அதன் சுரப்பிடமாய் மகத மலையின் மஞ்சனத்தி அருவியும்  அந்த நாட்டையே செல்வ செழிப்போடு செழிக்கச்செய்தது.நன்செய் நிலங்கள் பச்சை பசேலென்று முப்போகமும் விளைந்து காணப்பட்டது.மா,பலா,வாழை ஆகிய முக்கனியும் விளையும் தோட்டங்கள் விசாலமாய் விரிந்திருந்தது .

வறுமையற்ற நாடாகவும் வளமையான நாடாகவும் திகழ்ந்தது கும்பகை.அந்நாட்டு மக்கள் குறைகளின்றி வாழ்ந்தனர்.மன்னன் தனஞ்செழியன் கும்பகையை நல்லாட்சி புரிந்து வந்தார்.

தங்கமும்,வைரமும்,வைடூரியமும் பதிக்கப்பட்ட அரண்மனையும்,பஞ்சமற்ற மக்களையும் பார்க்கும்பொழுது அந்த நாட்டின் செல்வசெழிப்பு புலப்பட்டது.அமைச்சர் திவ்யரங்கன் நல்ல ஆலோசனை மன்னருக்கு வழங்குவதில் வல்லவர்.

வந்தோர்க்கு வயிறார புசிக்க கழனியில் விளைந்த கைக்குத்தல் அரிசியும்,தோட்டத்தில் விளைந்த பல வகையான காய்கறிகளும் சாம்பார்,கூட்டு,பொரியலோடு எந்தகாலகட்டத்திலும் அரண்மனை அருகே இருக்கும் அன்னதானமண்டபத்தில் விருந்தோம்பல் அயராது நடந்துகொண்டிருக்கும்.அத்தகைய மன்னன் தானம்,தர்மங்களிலும் எளிமையானவரல்ல வாரி கொடுக்கும் பாரி வள்ளல் .அவரின்  நீதியும்,வீரமும்,கொடையும் அவர் புகழை மக்கள் நாள்தோறும் பாடும் வண்ணம் திகழ்ந்தது.

கும்பகை நாட்டுமன்னன் தனஞ்செழியனின் தவப்புதல்வி அமுதவர்த்தினி .
மன்னன் தனஞ்செழியன்_ராணி அன்னமயில் இருவரின்  பத்து ஆண்டு வேண்டுதலின் பயனாய் சிவபெருமான் மனமிறங்கி பெற்றோர் ஸ்தானத்தை அளித்த துறுதுறுப்பான பெண்தான் அமுதவர்தினி.ஒரே மகள் என்பதால் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர் அமுதவர்தினியை.

ஆயகலைகள் அறுபத்திநான்கிலும் தேர்ச்சி பெற்றவள்.அறிவும்,திறனும்,அழகும் ஒருசேரப்பெற்ற அழகியவள்.

அமுதவர்த்தினியின் அழகை  வர்ணிக்க வார்த்தைகள் அடங்காது, கோலநடையழகி,மாதுளஞ்சிவப்பழகி,கயல்விழியால் கடைவிழிபார்ப்போர் கண்களை சிறையெடுக்கும் காந்தக்கண்ணழகி,நீண்ட நெடிய மயில்தோகையைப்போன்று அகன்று விரிந்த கார்குழலுக்கு சொந்தக்காரி,தேன்மதுரத்தில் அசைந்தாடும் முத்துப்பல்லழகியவள்,தனஞ்செழியன் இமையாக பொத்திப்பாதுகாக்கும் கும்பகையின் எதிர்காலம் நலம்பெற எண்ணிடும் பெண்சிங்கமவள்.

சிங்கமென்பதிலும் அர்த்தமுண்டு அரண்மனையிலேயே இளவரசியென வளர்ந்தாலும் அவள் வீரத்தில் குறைவில்லை. எந்த ஆண்மகனாலும் பெண்ணென்று எளிதில் அவளை வில்,வாள் வித்தைகளில் தோற்கடிக்க இயலாது.அழகில் சிறந்தவள் என்றபொழுதினிலும் அறிவிலும்,வீரத்திலும் சிறந்து விளங்குபவள்.

கல்வியில் தேர்ச்சி பெற்றவள் என்பதை அங்கு அரசவைக்கு வந்திடும் புலவர்களே பலமுறை புகழ்ந்ததுண்டு.கேள்விஞானம் அவளுக்கென எழுதப்பட்ட இலக்கணமாகும்.மன்னன் ஆண்வாரிசு இல்லையென்று ஒருபோதும் கவலைகொண்டதில்லை ஆண்மகனுக்கு நிகராய் வளர்ந்த அரசகுல இளவரசியவள்.

துறுதுறுப்பான பெண் என்பதால் நாட்டை சுற்றி கானகத்தை பயமற்று சுற்றுவாள்.சில நேரங்களில் பெற்றோரின் ஒப்புதலோடு வெளியே சென்றாலும் பலநேரங்களில் கள்ளத்தனமாய் வெளியே சுற்றுவதை விரும்புவாள் அதுவும் இளவரசியாக அல்ல சாதாரண பெண்ணாக. அமுதவர்த்தினிக்கு பல தோழிகளும் பணிப்பெண்களும் இருந்தாலும் சிறுவயதிலிருந்தே அவளுடன் தோழியாக வளர்பவள் தர்மினி.தர்மினி அமைச்சர் திவ்யரங்கனின் அன்பு புதல்வி  என்பதாலோ என்னவோ தெரியவில்லை அமுதவர்த்தினி_தர்மினி நட்பு மேலும் பலமுற்றது.  தனஞ்செழியனுக்கு திவ்யரங்கன் உற்ற தோழன் ,அதேபோல அமுதவர்த்தினி வயதையொத்த தர்மினி அவளுக்கு தோழியாகிவிட்டாள்.காலை நேரங்களில் சிலபொழுதுகள் தர்மினி தன் வீட்டில் கழித்தாலும் மற்ற நேரங்களில் அமுதவர்த்தினியுடன் அரசவையில்தான் இருப்பாள். இரவில் உறக்கமும் சிலபொழுதுகளில் அமுதவர்த்தினியுடன் கதைத்தவாறு  அரண்மனையிலேயே தொடரும்.

எல்லா நேரங்களிலும் இளவரசியின் சுகதுக்கங்களில் ஆறுதல் தர்மினிதான்.கள்ளத்தனமாய் வெளியே செல்வதற்கும் அவள்தான் உடந்தை.மொத்தத்தில் இருவரும் ஒரே குணாதிசயமுடையவர்கள்தாள்.

இயற்கையோடு இரவில் கொஞ்சி விளையாட விரும்பிய அமுதவர்தினி அன்று  தர்மினியை எழுப்பினாள்.

அன்று அமுதவர்த்தினியுடன் கதைத்துவிட்டு இரவில் அரண்மனையில் உறங்கினாள் தர்மினி.
"தர்மினி தர்மினி " என்றவளின் குரல் கேட்டு விழித்தவள் அங்கு ஒரு ஆண்மகன் நின்றிருப்பதைக்கண்டு அலற எத்தனித்தாள்.

அவள் வாயை பொற்றிய அவன்(அவள்) அப்படியே தன் அங்கவஸ்திரத்தால் தர்மினியின் வாயை பொற்றி மறைவான இடத்திற்கு கொண்டு சென்று தன் மாறுவேடம் கலைந்தாள்.தர்மினிக்கு இப்பொழுதுதான் உயிர் மூச்சு மீண்டும் வந்ததாய் உணர்ந்தாள்.

"இளவரசியாரே தாங்கள்தான் இந்த மாறுவேடத்திலா?..எதற்காக இப்படி வந்துள்ளீர்"என அமுதவர்தினியிடம் வினவினாள் தர்மினி.

"சோமவன கானகத்து அருகில் அமைந்திருக்கும் மஞ்சனத்தி அருவியில் இரவில் நீராட விழைகிறேன் நீயும் என்னோடு வாராயோ தோழியே"என்றாள் அமுதவர்தினி .

"ஐயகோ அது கோரமான மிருகங்கள் இரவில் சுற்றித்திரியும் அடர்ந்த கானகம் இளவரசியாரே.இக்கணம் அங்கு செல்வது என் மனதுக்கு ஒப்பவில்லை"என்றாள் தர்மினி.

முகத்தை கவலையோடு திருப்பிக்கொண்டாள் அமுதவர்தினி.

"அதிகாலை வேலைக்கு முன் அரண்மனை திரும்புவோம்...சற்று காத்திருங்கள் நானும் மாற்றுடையில் வருகிறேன்"என்று கிளம்பினாள் தர்மினி.

இருவரும் அமுதவர்தினியின் நண்பன் தசமுகன் மேலேறி கானகம் புறப்பட்டனர்.வெண்மை நிற குதிரை  அமுதவர்தினியின் ஆருயிர் நண்பன், அரசகுடும்பத்தின் சேவகன் தான் தசமுகன்.கோட்டை நுழைவாயிலை அடைந்தவளுக்கு காவலாளிகள் அறைகுறை உறக்கத்திலிருந்தது மிகவும் வசதியாயிற்று.

குறும்புக்கார இளவரசி குரலை மாற்றி மன்னன் தனஞ்செழியன் போன்று கட்டளையிட்டாள்"யாரங்கே? கோட்டை கதவைத்திறந்திடுங்கள்" அமுதவர்தினி உடனடியாக அரைநித்திரையிலிருந்த வாயிற்காப்பாளர்கள் மன்னன் மாறுவேடம் பூண்டிருப்பதாக எண்ணி வாயிற்கதவைத்திறந்தனர்.

அமுதவர்தினியின் குதிரை அசுரவேகத்தில் பறந்தது .பலவழிகள் கடந்தவர்கள் அந்த அடர்ந்த கானகத்தை அடைந்தனர்.இருள் சூழ்ந்த கானகத்தில் ஆந்தைகள் ஆங்காங்கே அலறியபடி  தர்மினியின் மனதில் அச்சம் கொள்ளச்செய்தன.அதனூடே அருவியின்  சலசலப்பும் செவிகளில் பாய்ந்து கொண்டிருந்தது.

"இளவரசியாரே அங்கு அருவியின் சலசலப்பொலி கேட்கிறது உணர்ந்தீர்களா"என்றாள் தர்மினி.

"ம்ம்ம் கேட்கிறது விரைவில் அருவியை அடைவோம்...தசமுகா மேலும் விரைவாகச்செல்"என கட்டளையிட்டாள் அமுதவர்தினி.

வௌவால்கள் பறந்து திரிவதைப்பார்க்க பயம் மனதில் சுழன்றது ஆங்காங்கே நரிகளும்,காட்டுநாய்களும் ஓலமிட்டு கொண்டிருக்க தர்மினியின் முகம் மாறியது"இளவரசியாரே...மீண்டும் அரண்மனை திரும்பிவிடுவோமா?"என்றாள் தர்மினி பயந்தவாறு.

"ஹாஹாஹா...கும்பகை பெண்களுக்கு பயமா அது தவறாயிற்றே..அரண்மனைக்கு அதிகாலைக்குள் திரும்பலாம்,நீ சற்று அமைதியாக என்னுடன் வாராய் தோழி"என்றாள் அமுதவர்த்தினி.

"இப்படி செய்கிறாரே இளவரசியார்..என் உயிருக்கு பங்கம் வந்தாலும் இளவரசியாரை பத்திரமாக அரண்மனை சேர்க்க வேண்டியது என் கடமையல்லவா?"என்று புலம்பியது தர்மினியின் மனம்.

"என்னே அங்கு யோசனை தர்மினி?...என்மேல் நம்பிக்கையில்லயா?"எனக்கேட்டாள் அமுதவர்த்தினி.

"ம்ம்ம்"என்று மௌனமாக தலையசைத்தாள் தர்மினி.

நான்கு கால் பாய்ச்சலில் அருவியை அடைந்தது தசமுகன்.அருவியின் சோலையிலே  பலவண்ண பூக்களும் உறங்கிக்கொண்டிருந்த நடுநிசிவேலையில்  தன் மாறுவேட உடையை மெல்ல கலைந்தாள் குமரியவள்.
அவளின் செம்மேனி கண்டு அங்கிருந்த விண்மீன்கள் வெட்கம்பூண்டது.

"நீயும் வாராய் தர்மினி சேர்ந்து நீராடலாம்"என்றாள் அமுதவர்தினி.

"கடுங்குளிராய் இருக்கிறது இப்பொழுது என்னால் நீராட இயலாது...தாங்களே செல்லுங்கள் இளவரசியாரே"என்றாள் தர்மினி.

"இளவரசியாரே நான் அங்கிருக்கும் பாறைக்கு சென்று அமர்ந்துகொள்கிறேன் தாங்கள் கவனத்தோடு   நீராடிவிட்டு என்னை அழைத்துச்செல்லுங்கள்"என்றாள் தர்மினி.

"ம்ம்ம்...ஆகட்டும்  என் அன்புத்தோழியே நான் நீராட செல்கிறேன்" என்றவள் மேலாடையை அகற்றிவிட்டு அருவிக்கு சென்றாள்.

பாறையில் அமர்ந்த தர்மினிக்கு உறக்கம் கண்களை சுழற்ற அப்படியே உறங்கிப்போனாள்.

கைவிரல்கள் விரைத்திடும் அளவிற்கு கடுங்குளிர் நிலவியபொழுதும் அருவியில் நீராடி களித்தாள் அமுதவர்தினி.

அருவியருகிருந்த மரத்தின் மேலமர்ந்து எதிரிகளின் இருப்பிடத்தை தன் கண்ணால் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் வதன நாட்டு இளவரசன் கார்முகிலன்.

கார்முகிலன் மாநிறத்தவன் அகன்ற புஜங்களும் கூரிய பார்வையும்,முறுக்கிய மீசையும் அவனின் வீர அடையாளமாய் திகழ்ந்தது.கம்பீரமான பேச்சும்,நன்னடத்தையும் அவன்  அரசவாரிசு என்பதை பறைசாற்றியது.

அழகான முகமும் ,நிமிர்ந்த நன்னடையும்,உயரமான உருவத்தையும்  பார்க்கும் பெண்களுக்குள்'இவனைப்போன்ற மணவாளன் வேண்டும்' என்று எண்ணத்தோன்றும் பேரழகன் அவன்.

அங்கேயிருந்த குடிலிலிருந்து யாரோ வருவதைக்கண்ட கார்முகிலன் அவன் எதிரிநாட்டு ஒற்றன் என்பதையறிந்து குதிக்க எத்தனித்தான்.

அவன் கால்கள் மரத்திலிருந்து இடறி அருவியில் பாய்ந்துவிட்டான் .நீரில் மூழ்கியவன் கைகளில் அமுதவர்தினி தங்கக்கொலுசு அணிந்திருந்த பாதம் அகப்பட்டது.

"ஆஆஆஆ..."என்று அலறியவள் தன் இடையில் வைத்திருந்த கத்தியை வைத்து அந்த கைகளை பதம்பார்த்தாள்.

கோபம் கொப்பளிக்க எழுந்த கார்முகிலன் அவள் இடையை தன் கரங்களுக்கிடையில் கிடத்தினான்.மேலாடையின்றி நின்றிருந்தவள் ,ஓர் ஆண்மகன் முன்னே இப்படி நிற்கின்றோமே என்று வெட்கித்தலைகுனிந்தவாறு தன் கைகளால் உடலை மூடிக்கொண்டாள்.

பெண்மையின் மென்மை அங்கே மலர்ந்தது எத்தனைதான் ஆண்மகனைப்போன்று வளர்ந்தாலும் அமுதவர்த்தினி பெண்ணல்லவா அவளுக்கே உண்டான நாணம் அன்று உயிர்பெற்றது.

கார்முகிலன் அவள் அழகிலும் வீரத்திலும் தன் மதியிழந்தான் .அவன் கரங்கள் அவள் இடையை விடுவதாக இல்லை.இதுவரை எந்த பெண்ணிடமும் இல்லாத ஈர்ப்பு இவளிடத்தில் கண்டான்.

"நாணமெனும் போர்வைக்குள்
வெட்கித்திரிந்த வெந்நிலவு இவள்தானோ
பித்தனானேன் இவளழகில்
உயிர்மொத்தமும் அவள்மடி சேர்ந்திட
நித்தம் துயில கொடியிடையாள்
அவளின் மேலாடையும் தானாகிட
அவாவுடன் காத்திருந்தான் மன்னவன்
அவன் சிந்தனையாவும் அவள்முன் சிற்பமாகியதன்றோ"

அமுதவர்தினி மேலாடையின்றி தவிப்பதைக்கண்ட  கார்முகிலன் வேகமாக சென்று மேலாடையை தன் வாளால் எடுத்து அவளிடம் நீட்டினான்.

வேகமாக மறைவான இடத்திற்கு சென்ற அமுதவர்தினி அந்த மேலாடையை அணிந்து வந்தாள்.அதற்குள் அமுதவர்தினியின் அலறல் கேட்ட தர்மினி அங்கு வந்து சேர்ந்தாள்.தங்கள் இளவரசியுடன் வீரத்திற்கு அடையாளமான ஒருவன் நிற்கிறான் என்பதையறிந்து மரத்தின் இடுக்கில் ஒளிந்தவண்ணம் என்ன நடக்கிறது என்பதை நோக்கலானாள்.

கார்முகிலன் கண்கள் மாறுவேடத்திலிருந்த இளவரசியை நோக்கியது.அவன் கைகளில் இரத்தம் சொட்டுவதை கண்டவள் பதைபதைத்தவாறு தன் அங்கவஸ்திரத்தை கிழித்து சில மூலிகை இலைகளை கசக்கி காயத்திற்கு மருந்திட்டு கட்டிவிட்டாள்.

அவளின் அன்பு கார்முகிலனை கரையச்செய்தது.

"பெண்ணே நீ யார்?"என்றான் கார்முகிலன்.

தலையைக்கவிழ்ந்தவாறே"யாம் கும்பகை தேசத்து இளவரசி அமுதவர்த்தினியாவேன்"என்றாள் அவள்.

அவன் அழகையும் வீரத்தையும் கண்டவள் இவன் கண்டிப்பாக அரசகுடும்பத்தை சேர்ந்தவன் என்று ஊர்ஜிதம் செய்தாள்.சிலமணித்துளிகள்  இருவருக்குள்ளும் மௌனம் நிலவியது.

"எம்மை யாரென்று கேட்கமாட்டாயா? சரிவிடு நானே உரைக்கின்றேன் நான் யாரென்று "என்றான் கார்முகிலன்.

"ம்ம்ம்...கூறுங்கள்..நீங்கள் யார்? எந்த தேசம்?" என குனிந்த தலை நிமிராது கேட்டாள் அமுதவர்த்தினி.

"யாம் வதன நாட்டு இளவரசன் கார்முகிலன்"என்றவன் கம்பீரமாய் தன் மீசையை முறுக்கிவிட்டான்.

தன் இடையிலிருந்த வாளை உருவியவன் பெண்ணவள் முகட்டுவாயில் வைத்தவண்ணம்"உன் வீரமும்,அழகும் எனைக்கவர்ந்தது...இந்த வருங்கால அரசனின் பத்தினியாக அரசியாவீரோ?"என்றான்.

வெட்கத்தில் தலைகுனிந்த அமுதவர்தினி"எம் நாட்டிற்கு எம்மை பெண்கேட்டு வாருங்கள்...பெற்றோரின் சம்மதமே என் விருப்பம்"என்றவாறு தனக்கு விருப்பமென்பதை குறிப்பால் உணர்த்தினாள் அமுதவர்த்தினி.

அமுதவர்த்தினிக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி தொற்றிக்கொண்டதற்கு யார் காரணம் என்பதை அவள் மனம் அறிந்தாலும் வெளிகாட்டவில்லை.

அவ்விடத்தை விட்டு அகலும் வேலையில் அவள் கரங்களை பற்றினான் கார்முகிலன்.மெல்ல  அவள் தன் கைகளை மனமின்றி விலக்கியவண்ணம் பிரியாவிடை கொடுத்து புரவியிலேற ஆயத்தமானாள்.அச்சமயம் தர்மினியை அந்த பாறையில் காணாது  தேட முற்பட்டவள்,அவ்விடத்தில் ஏதோ தவறு நடக்கவிருப்பதை சலசலப்பினால் உணர்ந்தாள்.

அங்கு சருகுகளின் சலசலப்பு கேட்டதும் எதிரி நாட்டு அரசன் தன் நாட்டின் வழிபாதையில் படைகளுடன் செல்வதைக்கண்ட கார்முகிலன் தன் வாளை வீசியெறிந்தான் .

அந்த வாளானது நேரே எதிரி நாட்டு வீரனின் முதுகுபுறம் பாய்ந்து அங்கே பிரளயம் உண்டாக்கியது.தனியே போய் போர் புரியும் கார்முகிலனை கண்ட அமுதவர்தினி அவனோடு சேர்ந்து போர் புரியத்தொடங்கினாள் இருவரும் ஜோடி போட்டு மாறுவேடத்திலிருந்த எதிரிநாட்டு வீரர்களையும், மன்னனின் கதையை தீர்த்தனர்.

அவளின் போரிடும் திறமை கார்முகிலனுக்குள் 'இவள்தான் என் மனைவியாகவேண்டும்'என்றவண்ணம் அவள்புறம் மதிமயங்கியது.

"தங்களது உதவிக்கு நன்றி"என்று அமுதவர்தினியிடம் கார்முகிலன் உரைத்தான்.

"யாம் வாழப்போகும் நாட்டை காப்பது எம் கடமையன்றோ?"என்றாள் அமுதவர்தினி.

"எம் கரம்பற்றி காலம்தோறும் வாழ்ந்திட சம்மதம் என்கிறாயா"என்று கார்முகிலன் கண்கள் அமுதவர்த்தினியிடம் உரைத்திட
'சம்மதம்'என்பதாக அமுதவர்த்தினியின் கண்கள் உரைத்தது.

புதரின் நடுவே நடப்பவற்றை கண்டிருந்த தர்மினி மெல்ல வெளியே வந்தாள்.

"இளவரசியாரே..வீரத்தமிழச்சிக்கு ஏற்ற வீரமகன்தான் போலும்"என்று சிரித்தாள் தர்மினி.

கார்முகிலனும் அமுதவர்த்தினியும் தங்கள் நிலையிலிருந்து நிகழ்வுக்கு வந்தார்கள்.சில வார்த்தைகளை கண்கள் உரைத்தாலும் அதில் ஆயிரம் அர்த்தம் உண்டல்லவா.

கார்முகிலனிடம் தர்மினியை  தன் உயிர்த்தோழியென அறிமுகம் செய்தாள் அமுதவர்த்தினி.

நேரம் சென்றுகொண்டிருப்பதையுணர்ந்த அமுதவர்த்தினிக்கு தோழி தர்மினி "விடியலுக்கு இன்னும் சிலநாழிகைகளே இருக்கின்றன  கிளம்பலாம் இளவரசியாரே....அதிகாலைப் பொழுதிற்குள் அரண்மனையை அடைய வேண்டும்"என்றாள் தர்மினி.

கார்முகிலனும் அமுதவர்தினியும் கண்களால் வழியனுப்பினர் .அமுதவர்தினி தன் புரவியேறி விரைந்து தன் நாட்டிற்கு சென்றாள்.

கார்முகிலனும் தான் வந்த வேலை கைகூடியதோடு தனக்கான பேரழகியை கண்ட மகிழ்ச்சியோடு அவ்விடம் விட்டு தன் நாட்டை நோக்கி பாய்ந்தான்.

மங்கையவள் மனதில் மன்னவனிடம் தன் பெண்மை உணர்ந்ததை எண்ணி காதல் களிப்பில் அகமகிழ்ந்தாள் முகமெல்லாம் நாணமும்,காதலும் பெருகியது.

அரண்மனை சோலையில் வீற்றிருந்த அவளிடம் தோழி தர்மினி"இளவரசியாரே காதல் களிப்பில் உங்கள் முகத்தின் அழகு மெருகேறியுள்ளதே"என்றாள்.

சிரித்தவண்ணம்"அவரைக்காண மனம் ஏங்குகிறது "என்றவாறு பூஞ்சோலையில் வாட்டத்தோடு தர்மினியுடன்  ஊஞ்சலாடினாள்  அமுதவர்தினி.

"இதோ அதற்கு ஏற்பாடு செய்திடலாம் இளவரசியாரே "என்றவாறு அங்கு சோலையில் நெல்மணிகளை கொத்தித்திரிந்த புறாவின் கால்களில் சிறிய ஓலையில் அமுதவர்தினி எண்ணத்தை எழுத்தாணியால் எழுதிட அதனை தூதனுப்பினாள் தர்மினி.

புறா வதன தேசத்தை அடைந்து இளவரசனிடம் தூதுசென்றது.அதே புறாவின் கால்களில் 'இரண்டாம் திங்களிலே இரண்டாம் சாமம் நாம் சந்தித்த வனத்திலே மீண்டும் சந்திக்கலாம்'என்ற செய்தியை அனுப்பிவைத்தான்.

கார்முகிலனின் பதில் மடலில் கரைந்து போனாள் அமுதவர்தினி.

'அன்பே உன் விழி காண என் மனம் ஏங்குகிறதுகுறித்த நாளில் உன்னைக்காண்பேன்
விரைவில் பெற்றோரின் சம்மதத்தோடு உனை மனம்புரிவேன்'
என  புறாவில் பதில் தூதனுப்பினான் கார்முகிலன்

இருவரும் மறுமுறை சந்தித்தனர் அக்கானகத்தில் இருள் சூழ்ந்திருந்த வேளையில் தன் மன்னவனுக்காக காத்திருந்தாள் அமுதவர்தினி.அவன் வருகைக்காக காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது.கார்முகிலன் வாராது போனதால் மனமுடைந்தாள்.நேரம் சென்றுகொண்டிருக்க நடுஇரவு தாண்டியதால்  கவலை தோய்ந்த முகத்தோடு தசமுகனை செலுத்தும் வேளையில் கருப்பு குதிரையில் முகத்தை மறைத்தவாறு தன் வாளால் அவள் கழுத்தைசுற்றி வளைத்தான் அவன்.

வாளால் தன்னை சிறையெடுப்பவன் கார்முகிலன்தான் என்பதையறிந்தவள் தன்னை காக்க வைத்த குற்றத்திற்காக அவன் மேல் பொய்க்கோபத்தோடு ஊடல் ஆரம்பமானது கானகத்தில்.அவள் கன்னங்களில் தன் அடர்மீசை கொண்ட கன்னங்களால் உராய்ந்தான்.பெண்ணவளின் நாணம் கூச்சம்கண்டு உடலெல்லாம் புதுவித பரவசம் பரவியது.

மெல்ல அவளை தன் வசம் திருப்பியவன் அவளின் மெல்லிடையை பற்றினான்.

"அமுதா மன்னித்துக்கொள் எனக்கும் உன்னை பார்க்க ஆவல்தான். நேற்றைய பொழுதில்நாட்டு நலன் குறித்து அமைச்சர் உதயநீதி ஆலோசனை தந்த சில காரியங்களை பற்றி திட்டமிட்டுக்கொண்டிருந்தேன் அப்படியே உறங்கிவிட்டேன்.விழிக்கும் வேளையில் உன் நினைவு எனை ஆட்கொள்ள ஓடோடி வந்தேன்" என்றான் கார்முகிலன்.

"உனக்கு கொடுத்த சத்திய வாக்கை காக்காவிட்டால் நான் நல்ல அரசனில்லையே...நீதி தவறுவது அரசகுடும்பத்திற்கு அழகில்லையே" என்றவாறு அவள் முகட்டுவாயை தூக்கிநிறுத்தி அவள் கண்களை நோக்கினாள்.

அவள் கண்கள் காதல் நோயால் கிரங்கிக்கிடந்தது.அவள் தேகம் அவனை எண்ணி ஏங்கி மெலிவுற்றிருந்தது.அவன் வாராத ஏக்கம் தோய்ந்த முகம் வாடியிருந்தது.இதில் அவள் எத்தனை தூரம் தன்னிடம் பேரன்பு கொண்டிருக்கிறாள் என்பதறிந்தான்.

ஊடலைத்தொலைக்க கூடல் அவசியமன்றோ.நேராக அங்கே மலைக்காடுகளில் நிறைந்திருந்த வண்ண மலர்களை  இரண்டு மாலையாக தொடுத்தான்.இருவரும் காந்தர்வத்திருமணம் புரிந்துகொண்டனர் நிலவையும் அருவியையும் சாட்சியாய் நினைந்து.அவள் நெற்றியில் அங்கிருந்த காளி கோவிலின் வாசலிலிருந்த செம்மண்ணை அவளுக்கு நெற்றி திலகமாய் இட்டுவைத்தான்.

அவன் கழுத்திலிருந்த வைடூரியம் பதித்த மாலையை அவள் சங்கு கழுத்தில் அணிவித்து"நீயே வதன நாட்டு அரசி,என் ஆருயிர்க்கு சொந்தமானவள்"என்றான்.

"இக்கணம் முதல் நீ என் மனைவியாவாய் .ஈரேழுலகமும்,தேவர்களும்,நிலவும்,இயற்கையும் நம் திருமணத்தின் சாட்சியாகும்..ஏழேழு ஜென்மங்களும் உம்மை யாம் பிரியமாட்டோம் "என்று மொழிந்தான் கார்முகிலன்.

மெல்ல அவள் செவ்விதழை அழுந்தப்பிடித்தவாறு காதலின் அடையாளமாய் அவள் இதழோடு இதழ் பதித்தான்.

பெண்ணவளின் நாணம் அவனை தடுத்தாலும் வீரனின் பிடியிலிருந்தவளுக்கு காதல் நோய்க்கு மருந்து தேவைப்பட்டது, பெண்ணியம் அவன் தந்த முதல் முத்தத்தை காதலோடு  லயிக்கச்செய்தது.

காதலோடு அமுதவர்தினியின் காதுமடல்களுக்கு அருகில் சென்றவனிடம்"அரசே...இன்னும் சிறிது நாழிகையில் பொழுது புலர்ந்துவிடும் நான் நாட்டிற்கு திரும்ப வேண்டும்"என்றாள்.

மெல்ல அவளை  தன் பிடியிலிருந்து விடுவித்தவன் பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தான்.

பொழுது புலர்ந்ததிலிருந்து காரிகையவளின் இதழ் தீண்டலில் தொலைந்தவனுக்கு அவள் எண்ணம் மட்டுமே காதலாய் ஆட்கொண்டிருந்தது.

கார்முகிலன் தன்தூரிகையால் தன் உள்ளம்கவர்ந்த அழகுபதுமையின் எழிலழகை அங்கம் பிசறிடாமல் புனைந்து முடித்தான் ஓவியத்தின் வடிவில்.தன் தாயிடம் அவன் காதல் கொண்ட இளவரசியை பற்றி எடுத்துரைத்தான்.

மாதுளஞ்சிவப்பு மங்கையவளின் ஓவியத்தை கண்டதுமே இவளை தன் மருமகளாக்கிக்கொள்ள வேண்டுமென அரசியார் திலகம்மை மனம் துடித்தது.எழில் கொஞ்சும் அழகு,வனப்பான உடல்,கற்றுத்தெளிந்த முகம் இத்தகைய அமுதவர்தினிதான் தன் மகனுக்கு பொருத்தமானவள் என எண்ணத்தோன்றியது.

மன்னன் கேசவர்தனிடம் பெண்ணின் ஓவியத்தை காட்டினாள் வதன நாட்டு அரசியார் திலகம்மை.

மகனின் விருப்புக்கேற்ப படை பரிவாரங்களுடன் கும்பகையை நோக்கி சென்றனர் அரசனும் அரசியும்.

வதனநாட்டு அரசன் வருவதாக ஒற்றன் செய்தியறிவிக்க நன்கு உபசரித்து வரவேற்றான் தனஞ்செழியன்.நாட்டின் வளமையும் அழகும் கேசவர்தனை மேலும் வெகுவாய்க்கவர்ந்தது.

இருவருக்கும் திருமணத்தை மகிழ்ச்சியோடு முடிவுசெய்தனர் பெற்றோர்கள்.

இதற்கிடையே வதன தேசத்திற்கும் சத்குண தேசத்திற்கும் போர்மூண்டது.அரசர் கேசவர்தன் இளவரசனை படைகள் திரட்டி போர்புரியுமாறு கட்டளையிட்டார்.

முப்படைவீரர்களையும் தளபதி நற்றினியன் பொறுப்பில் ஒன்றுதிரட்டினான் அரண்மனையில் அபாயமணி ஒளிக்கப்பட்டது.நாட்டுமக்கள் அனைவருக்கும் போர் பற்றிய அறிவிப்பு வாசிக்கப்பட்டது.வீரத்திற்கு பெயர்போனவன் கார்முகிலன் இதுவே முதல்முறையாக தான் ஒன்றுதிரட்டி போராடும் போராகும்.

"வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் வதன தேசத்திற்கே எம் உயிர் சமர்ப்பணம் "என்ற கார்முகிலன் முழங்க,வதன தேசத்து மக்களும் முப்படை வீரர்களும் வழிமொழிந்தனர்.

தன் காதலிக்காக ஓலையில் போருக்கு செல்வதை அமுதவர்தினிக்கு ஒற்றன் மூலம் தூதனுப்பினான் கார்முகிலன்.

ஒற்றன் வழி செய்தி கேட்டறிந்தவளுக்கு மனதில் கலக்கம் தொற்றிக்கொண்டது.

'போரில் தன்னவனுக்கு எதுவும் ஆகாது' என்று மனசாட்சியின் ஒரு புறம் கேட்க மற்றொருபுறம்' அவன் மாய்ந்தால் நானும் மாய்ந்திடுவேன்'என்று ஒலித்தது.

அமுதவர்தினி காளி மாதாவிடம் தன்னவனை காக்குமாறு கடும் விரதம் பூண்டாள் .உண்ணாமல் நீரும் அருந்தாமல் ஒருவாரகாலம் விரதம் நீண்டது.தர்மினிக்கு தன் தோழி கார்முகிலன் மீதுகொண்ட தீராக்காதலை எண்ணி அவளும் அம்பாளிடம் வேண்டிக்கொண்டாள் தன் தோழி நலன் கருதி.

கார்முகிலன் வெற்றி வாகை சூடினான் அவன் சமயோஜித புத்தியும் போர்த்தந்திரமும் போர்களத்தில் அவன் தேசத்தை வெற்றி பெறச்செய்தது.மக்களெல்லாம் பூக்கள் தூவி இளவரசனை வரவேற்றார்கள்.அரண்மனை வாயிலில் சங்குமுழங்க நெற்றி திலகமிட்டு அரண்மனைக்கு அழைத்துவந்தனர். சத்குண தேசத்தையும் அவன் தன் வசமாக்கினான்.

கும்பகை நாட்டு ஒற்றன் மூலம் செய்தியறிந்த அமுதவர்தினி மனநிறைவடைந்தாள்.நீர் அருந்தி விரதம் முடித்தாள்.

அன்றைய இரவுப்பொழுதில் நித்திராதேவி அவளை நெருங்கவில்லை.தான் போர் முடிந்து திரும்பிய செய்தியும் அறிவிக்கவில்லையே அவர் என்று நினைத்தாள்.

பெண்ணவள் மனம் தன்னவனின் செய்கையால் கோபம் கொண்டது.

இரவு நெருங்கியதும் தாங்கள் சந்தித்த அருவியோரம் செல்ல முடிவு செய்தவள் தன் புரவியேறி நடுநிசியில் பயணித்தாள்.மஞ்சனத்தி அருவியருகே பாறையில் சோகமாக அமர்ந்திருந்தாள்.

திடீரென்று ஓர் பெரிய உருவம் அவள்மேல் விழுந்ததும் "ஆஆஆஆஆ....ஆபத்து ஆபத்து...காப்பாற்றுங்கள்"என்று அலரித்துடித்தாள்.

அந்த உருவம் இரவு வேளையில் அமுதவர்தினியை முழுமையாய் இறுக்கத்தொடங்கியது.எதிர்பாராவிதமாய் அங்கு வந்த கார்முகிலன் தன்னவளை ஆட்கொண்டிருந்த அந்த மலைப்பாம்பினை தன் வீரம்கொண்டு மெல்ல அகற்றினான்.தன் வாளால் அதனை துண்டம் செய்தான்.அவள் கட்டியிருந்த மெல்லிய சீலை விலகிய வண்ணம் அவள் இடையழகு  பகலவன் பட்ட பனித்துளியாய் மிளிர்ந்தது.அழகுப்பதுமையை அள்ளிக்கொள்ள நினைத்தாலும் காலம் கடந்திடாது கனியை புசிக்கக்கூடாது அது அரசகுலத்தவனுக்கு அழகல்ல என மனம் உரைத்தது.தன்னவளை அவள்நிலை மாறாது மணக்க எண்ணினான் அந்த கண்ணியமானவன்.

மெல்ல அவளருகில் சென்றவன்"அமுதா என் மேல் வருத்தமா"என்றான்.

பதிலேதும் பேசாது மடந்தையாய் நின்றிருந்தாள் அமுதவர்தினி.

மேகங்கள் கருத்து மின்னல்கள் வெட்டிட இடிமுழக்கத்தோடு அங்கே பெருமழை பெய்தது.

"மழையில் தொலைந்தது அவன் மனம்
மதுரங்கள் தீண்டிட
பிரிவுநோயாற்றுமோ பிரிந்துவாடும்
உயிர்க்கு காதல் கலந்த கண்ணாளனின் அன்பு குடியேறிடுமோ"

என நினைத்தது ஆண்மனம்.

அவளைக்காக்கும் பொருட்டு மெல்ல அருகிலிருந்த குகைக்கு அழைத்துச்சென்றான் கார்முகிலன்.இதோ மழைக்கு இதமாய் அவள் வெண்பட்டு தேகத்தை அணைத்தான்.

அனிச்சமலரென அவள் உடல் சுறுங்கிப்போனாள்.அவன் மார்பில் அவளுக்கு ஆறுதல் கிட்டியது.அவள் கண்களோ கண்ணீரை சுரந்தன.

'தன்மேல் இத்தனைதூரம் அன்புகொண்டவளை இனி ஒரு திங்களும் பிரியமாட்டேன்'என்று கார்முகிலன் மனம் உரைத்தது.

அப்படியே உறங்காதிருந்த அவள் விழிகள் மன்னவனின் மடியில் துயில்கொண்டது.அவனும் குகைவாயிலில் தன்னவளின் தலை சாய்த்த வண்ணம் உறங்கினான்.

விடியற்காலை பொழுது நெருங்கியதை உணர்த்த தசமுகன் கணைத்தது.பிரிந்து வாடிய இரு உள்ளங்களும் பலநாட்களுக்கு பின் அயர்ச்சியால் உறங்கியது.தசமுகன் குரல்கேட்டு வெட்கத்துடன் அவ்விடம் விட்டு அகல முற்பட்டாள் அமுதவர்தினி.

கார்முகிலன் அவள் கரங்களை மெல்ல இழுத்து தன்னருகே கிடத்தியவண்ணம் அவள் கன்னங்களை தன் விரல்களால் கோலமிட்டவாறு "விரைவில் உன்னை முறையோடு மணப்பேன்"என்றான்.

வெட்கியவள் அங்கிருந்து வண்ணத்துப்பூச்சியாய் பறந்தாள்.அவள் கெண்டை கால்கள் நிலத்தில் பதிய ஓடோடி சென்று குதிரையில் ஏறினாள்.அவள் விழிகள் 'விரைவில் என்னை உன்வசமாக்கிடு ' என்பதுரைத்தது.

அதற்குள் அரண்மனையில் பிரளயமே உருவாகியிருந்தது அமுதவர்தினியை காணாது அனைவரும் தேடிக்கொண்டிருந்தனர்.தசமுகனையும் காணவில்லை என்றபொழுதே தர்மினி தன் தோழி எங்கு தன்னிடமும் சொல்லாது சென்றிருப்பாள் என்பதுணர்ந்தாள்.

'கள்ளி...எங்கே சென்றாயென நானறிவேன்'என தர்மினியின் மனம் நினைந்தது.

காலை வேளையும் புலர்ந்தது மாலை வேளையும் வந்தது அமுதவர்தினி நாடு திரும்பிய பாடில்லை.கும்பகை மன்னனும் அரசியும் மகளைக்காணாது வருத்தத்தில் ஆழ்ந்தனர்.

தனஞ்செழியனின் மனம் பதைபதைக்க அந்த மாலைப்பொழுதினிலேயே அமைச்சர் திவ்யரங்கனின் ஆலோசனையோடு நாடுமுழுவதும் இளவரசியைத்தேடி படைவீரர்கள் அனுப்பப்பட்டனர்.

தர்மினி தன் தந்தையிடம் அவர்களிருவரும் அடிக்கடி சென்றுவரும் இயற்கையின் அழகி மஞ்சனத்தி அருவியருகே தேடுமாறு பரிந்துரைத்தாள் .அங்கும் தேடியாயிற்று இளவரசி கிடைக்கவில்லை என்ற செய்தியே  கிடைத்தது.தர்மினியும் பல இடங்களில் சென்று கவலையோடு தேடியலைந்தாள்.

தனஞ்செழியன் தன் மகளின் பிரிவால் வாடித்துடித்தார்.அவள் வரவில்லையென்றறிந்த கணமே தீடீரென தன் நெஞ்சை பிடித்தவாறு நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகிப்போனார்.அவரை வைத்தியர்கள் கவனித்துக்கொண்டார்கள்.

ராணி அன்னமயிலும் செய்வதறியாது மனதால் வருத்தமுற்று வாடிப்போனார்.உண்ணாது உறங்காது மகளின் பிரிவையும் கணவரின் நிலையையும் கண்டு கலங்கினார்.கும்பகையே இளவரசியைக்காணாது துயருற்றிருந்தது.

இதோ வெண்புறாவின் கால்களில் அவளுக்கென தூதனுப்பினான் கார்முகிலன் அதற்கு பதிலில்லை ஒவ்வொரு நாளும் அவனனுப்பிய தூதிற்கு பதிலில்லை .இப்படியே நான்குநாட்களை நெருங்கக்கண்டவன் பதறியவண்ணம்  மாறுவேடத்தில் கும்பகை நோக்கி பறந்தான்.

தர்மினியின் கண்கள் கண்ணீர்வடித்து வீங்கியிருந்தது.அவள் மனமற்ற மல்லிகையாய் வீற்றிருந்தாள்.தோழியை காணாது கலங்கியவண்ணம் இருவரும் விளையாடும் சோலையருகே.

இளவரசியைப்பற்றி யாரிடம் கேட்டறிவது என திகைத்த கார்முகிலன் சோலையில் தோழியின் பிரிவால் வாடியிருந்த தர்மினியை கண்டான் கார்முகிலன்

மெல்ல அவன் முகத்திரையை விலக்கி  தர்மினியிடம் தான் கார்முகிலன் என்பதை காட்டினான். கார்முகிலன் என்பதறிந்த தர்மினி 'இளவரசியை இளவரசரிடம் கேட்டறியலாம்'என மனதில் நினைந்தாள்.

"அமுதா எங்கே...ஏன் என் தூதுகளுக்கு பதிலில்லை"என்றான் கார்முகிலன்.

"இளவரசே ,உங்களை காணத்தானே இளவரசியார் வந்தார்.."என்றாள் தர்மினி.

"ஆம் என்னை காணத்தான் வந்தார்...எம்மை கண்டு கதைத்துவிட்டு கும்பகை நோக்கித்தானே புறப்பட்டார்"என்றான்  கார்முகிலன்

"இல்லை அன்று உங்களை காணச்சென்றவர் திரும்பவில்லையே,
ஐயகோ யாம் என்ன செய்வேன்"என்று பதறினாள் தர்மினி.

"இளவரசியார்க்கு என்னவாயிற்று ? எங்கே அவள்?அவளின்றி யாம் என்ன செய்வேன்?அவள் எம் உயிரன்றோ?"என கலங்கினான் கார்முகிலன்.

கார்முகிலனின் மனம் பதைபதைத்தது"என் அமுதாவிற்கு என்னவயிற்றோ? அய்யகோ நான் என்ன செய்வேன்?"எனக்கதறினான்.

அவள் விழியினை காணாது இவ்வுயிர் போய்விடுமோ என்ற நிலையில் வெளியே காட்டாதிருந்தாலும் அவனின் வாட்டம் அவனுடைய கவலையை காட்டியது.

"இளவரசியை காணாது மன்னன் நோயுற்றுள்ளார்,அரசியார் உண்ணாது உறங்காது கவலையில் இருக்கிறார்,கும்பகையே இளவரசியை காணாது சோர்வுற்றிருக்கிறது...என் மனமெல்லாம் என் தோழியை நாடுகிறது"என தன்னுடைய கவலையை கார்முகிலனிடம் கூறினாள் தர்மினி.

"சரி கவலைகொள்ளாதே தர்மினி...இளவரசியை யாம் தேடி செல்கிறேன்,அவரை கும்பகையில் சேர்ப்பது எம் பொறுப்பு"என்றவாறு குதிரையில் புறப்பட்டான் கார்முகிலன்.

அவனின் சமயோஜித புத்தி பலகோணங்களில் யோசித்தது அவன் நேரே அவர்கள் இருவரும் ஒன்றுகூடும் மஞ்சனத்தி அருவியருகே கவலையோடு சென்றான்.அங்கு குதிரையின் காலடித்தடங்களை கண்டவனுக்கு சிறிது தூரத்தில் ஒரு அழுகிய நாற்றமெடுத்தது.

"இது அமுதாவாய் இருக்கக்கூடாது "என்று எண்ணியவண்ணம் சென்றிட அங்கே ஏதோ ஒரு மிருகம் சிதைந்த நிலையிலிருந்தது.அருகே மரத்தில் தசமுகன் கட்டப்பட்டிருந்தது.கார்முகிலனைக்கண்ட தசமுகன் கண்கள் கலங்கியது,தன் அமுதாவை யாரோ கடத்திவிட்டார்கள் என்பதை அங்கே கிடந்த சீலைத்துணியினுள் கட்டப்பட்டிருந்த சருகினை கண்டதுமே அவன் அறிந்துகொண்டான் .உண்ணாது உறங்காது ஒருவாரமாய் சோர்வுற்றிருந்தான் தசமுகன்.

"சரி தசமுகா....அமுதாவிற்கு ஏதோ ஆபத்து.. உன்னை உன் நாட்டில் சேர்த்துவிட்டு விரைவில் அமுதாவுடன் திரும்புவேன்"என்றவன் தசமுகனை ஒரு கையில் பிடித்தவாறு நேராக கும்பகையின் அரண்மனைக்கு அழைத்துச்சென்றான்.

தசமுகனின் கணைப்பு கேட்டதும் தனஞ்செழியன்"தசமுகா...தசமுகா"என ஆவலோடு வெளியே வந்தார்.இத்தனைநாள் கவலையில் உடல் நோய்வாய்ப்பட்டிருந்தவர் தன் மகள் கிடைத்துவிட்டாலென்ற எண்ணத்தில் ஓடோடி வந்தார்.ராணியார் அன்னமயிலும் கோட்டை வாயில் கதவருகே.ஓடோடி வந்தார்.ஆனால் இருவருக்கும் எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

தசமுகனை கார்முகிலன் அழைத்துவந்ததோடு  தசமுகனை எவ்வாறு அழைத்துவந்தான் என்பதை அரசரிடம் விவரித்தான்.

"இளவரசி அமுதவர்த்தினியை யாரோ கவர்ந்து சென்றுள்ளனர்,அதற்கு சாட்சியாய் தன் சீலை முடிந்த சருகை இட்டுச்சென்றுள்ளார்.விரைவில் என்னவளை காத்துவந்து மணம்புரிவேனாக இது வதனநாட்டின் மீது கார்முகிலன் இட்டுக்கொள்ளும் சத்தியவாக்காகும்"என்றான் கார்முகிலன்.

தவமிருந்து பெற்றவர்கள் கலங்குவதை அவனால் காண இயலவில்லை.
கார்முகிலன் கொடுத்த நம்பிக்கையில் சற்று மனம் தேறினார்கள்.

"சென்று வென்று வாருங்கள் "என்றவண்ணம் அவன் நெற்றியில் வீரத்திலகமிட்டுவைத்தார்கள் தர்மினியும் ,ராணி அன்னமயிலும்.

அவனோடு கும்பகை நாட்டு வீரர்கள் சிலரும் சென்றார்கள்.தன் கைவசம் தூதுவிடும்  புறாவையும் எடுத்துச்சென்றிருந்தான் கார்முகிலன்.

கார்முகிலனை அனுப்பிய வேலையிலும் தர்மினியின் மனம் கேட்கவில்லை.தர்மினி தன் தோழிக்காக காத்திருந்தாள்.அன்றிரவு அவள் மனம் தன் இளவரசி இவ்விடம் நோக்கி சென்றிருப்பாளோ? என  பலவாறு அச்சம் கொண்டது .காளிதேவியிடம்'எம் தோழிக்கு எந்தவித தவறும் நடந்துவிடக்கூடாது...அவர் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும்...இளவரசியை மீட்கச்சென்ற இளவரசரும் நல்முறையில் நாடு திரும்ப வேண்டும்'என வேண்டியவாறு கண்களில் நீரோடு அமர்ந்திருந்தாள்.

கார்முகிலனிடம் பொறுப்பை ஒப்படைத்தாலும் பெற்றவர்கள் குற்றுயிராய்  தன் மகளை தொலைத்த சோகத்தில் வழி மீது விழி வைத்து காத்திருந்தார்கள்.

அன்றிரவு குறிப்புணர்ந்த இடத்தினருகே தன் படைகளோடு ஓய்வெடுத்தான் கார்முகிலன். தூக்கம் மறந்து தன்னவளின் விழியைக்காணமாட்டோமா என்றவண்ணம் "அமுதா அமுதா"எனப்பிதற்றியது கார்முகிலனின் மனம்.

தர்மினி மனதில் கலக்கம் கொண்டாலும் அரண்மனையில் அரசனுக்கும் அரசியாருக்கும் ஆறுதல் கூறியவண்ணம் தன் தோழிக்காக காத்திருந்தாள்.

காலை புலர்ந்ததும் குறிப்புணர்ந்த இடத்தில் சில கால்தடங்கள் செல்வதைக்கண்டான்.கார்முகிலனின் புத்தி பொறிதட்டியது,அமுதவர்த்தினி இவ்வழி கடத்திச்செல்லப்பட்டிருக்கலாம் என யூகித்தான்.அவன் அனுமானத்தில்
அவ்வழி நோக்கி புறப்பட எத்தனித்தான் கார்முகிலன்.

கும்பகை வீரர்களை அவ்விடத்தே இருக்குமாறு பணித்துவிட்டு ,தம் கையில் தூதுசெல்லும் புறாவை மட்டும் எடுத்துச்சென்றான்.

மரம்நிறைந்த அக்கானகம் அடைவதற்கே இரண்டு பகலும் இரண்டு சாமமும் சென்றாயிற்று போகும் வழியிலே பல நீண்ட ஓடைகளை கடந்து சென்றான்.சிறு சிறு குன்றுகள் பார்க்க ரம்மியமாக இருந்தாலும் கார்முகிலனின் மனம் அவற்றில் நாட்டம் கொள்ளவில்லை,அவன் முழுமையாய் காதலை தொலைத்த கவலையில் மூழ்கியிருந்தான்.

அங்கொரு குன்றின் மீதொரு குகையை காண்கையில் அவனையறியாது சற்று நேரம் கற்சிலையாய் நின்றிருந்தான் .

"ஏழேழுஜென்மங்களும் உம்மை பிரியமாட்டேன்"என்ற அவனுடைய
வாக்கு அவனுள் ஒலித்தது.அவன் மனம் இக்கணம் காதலியைத்தேடுவதை மறுத்து தான் காந்தர்வமணம் புரிந்த மனைவியை கண்டுகொள்ள ஆயத்தமானது.

நீண்ட பாதைகளை கடந்தவன்  குன்றின் அடிவாரத்தில் கழுகுகள் சூழ்ந்திட உடலிருப்பதைக்கண்டு வேகமாய் தன் குதிரையை செலுத்தினான்.

அங்கு அவன் கண்ட காட்சி உரையச்செய்தது.அவ்விடத்தே கிடந்தது சத்குணநாட்டு இளவரசன் இருக்குமிடத்தை அறிந்துவருமாறு அனுப்பிவைக்கப்பட்ட தம் வதன தேசத்து ஒற்றனின் சடலம்.அவ்வுடலை பார்க்கும்பொழுதே புரிந்தது முந்தைய நாள்தான் இறந்திருக்ககூடுமென்று.

அவ்வொற்றன் தன் கையில் ஓலையில் ஒருகுறியீட்டை ரத்தத்தால் வரைந்திருந்தான்.அது சிறுத்தையின் ஓவியம் பதித்த படமாகும் .அதுவே சத்குண தேசத்தின் முத்திரையாகும்.

இவ்வழியில்தான் சத்குணநாட்டு இளவரசன் இருக்கிறான் என்பது முழுமையாக தெரிந்தது.அங்கே தன்னவளை கவர்ந்திருக்கக்கூடும் என்று இளவரசரின்  உள்மனம் நினைந்தது.குதிரையில் பயணித்தவனுக்கு மேலும்  ஓய்வின்றி பயணித்ததால் களைப்புற்றது. எனவே அயர்ச்சியில் ஓரிடத்தில் குதிரையை கட்டிவிட்டு இளைப்பாறச்சென்றான் அங்கே அவன் கண்களில் வெண்மை நிறத்தில் ஏதோ தென்பட்டது.

அந்த வழியெங்கும் அமுதவர்த்தினியின் முத்துமாலை போடப்பட்டிருந்ததை உணர்ந்தான் கார்முகிலன். அவன் அயர்ச்சி புத்துணர்வைக்கண்டது.அந்து முத்தை தன் இதழருகே கொண்டு சென்றவன் தன்னவளென நினைந்து அழுந்த முத்தம் பதித்தான் ஏக்கத்துடன்.  அந்த முத்துக்கள் காட்டிய திசையை நோக்கி தன் குதிரையில்  சென்றான்.

கானகத்தை கடந்தவனுக்கு அந்த முத்து அவ்விடத்தே முடிந்ததை உணர்ந்தான்.அங்கே நான்கு திசைகளில் கானகம் சென்றது,சற்று யோசித்தவனுக்கு அங்கே சிறிய அடையாளமாய் குதிரையின் கால் குளம்புகள் சகதியில் பதிந்து திசையைக்காட்டின.அவ்விடத்தே அவன் செல்லும் வழியை குறிப்புடன் புறாமூலம் தூதனுப்பினான் கார்முகிலன்.

வேகமாக குதிரையை அந்த திசை நோக்கி செலுத்தினான், குதிரை  அசுர வேகத்தில் பறந்தது.

பெரியகானகத்தருகில் குடில் போன்ற இடத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தாள் அமுதவர்த்தினி.கார்முகிலனும் அமுதவர்த்தினியும் காதலிப்பதை அறிந்தவன் தன் தந்தையின் இறப்பிற்கும் தன் நாட்டின் வீழ்ச்சிக்கும் கார்முகிலன்தான் காரணமென்பதால் வஞ்சம் தீர்க்க எண்ணி கார்முகிலனின் காதலியை கவர்ந்து சென்று தான் வாழும் கானகத்தில் சிறைவைத்தான்.

ஆம் சத்குண தேசத்து இளவரசன் சாத்வீகன்தான் இத்தகைய காரியத்தை செய்தது.

"நீர் யாரோ? எதற்காக எம்மை கவர்ந்துவந்தாய்"என ஆக்ரோஷமாய் கனல் எரிக்கும்  பார்வையோடு கத்தினாள் அமுதவர்த்தினி.

"கூடிய சீக்கிரத்தில் தெரியவரும் இளவரசி...எல்லாம் உன் காதலனை வஞ்சம் தீர்த்திடத்தான் அன்பே"என்றவாறு சிரித்து சென்றான் சாத்வீகன்.

"யாரை அன்பே என்றழைத்தாய்? என் உயிரும் உடலும் என்னவனான  கார்முகிலனுக்கு மட்டுமே சொந்தமாகும்,விரைவில் என்னை உன்னிடமிருந்து மீட்டெடுப்பார்"என்றாள் அமுதவர்த்தினி.

"பெண்ணே எதற்காக ஆக்ரோஷத்துடன் பார்க்கிறாய்...நீயோ பெண் உன்னால் இவ்வீர ஆண்மகனை என்ன செய்ய இயலும்"என்றான் சாத்வீகன்.

"என் கைகளில் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அவிழ்த்துப்பார்....என் வாள் உன் உயிரை பதம் பார்க்கும் கிராதகா"என்றுரைத்தாள் அமுதவர்த்தினி.

"ஆம் கேள்விப்பட்டுள்ளேன் உம்மையும் உம் வீரத்தை பற்றியும் ஒற்றன் வழி அறிந்தேன்...அதனால்தான் வேல்விழியாலள் மீது மையல் கொண்டேன்"என்றான் சாத்வீகன்.

அவள் கனல் தெரிக்கும் பார்வையை நெருப்புக்குழம்பாய் வீசினாள்.

அவளின் அழகான விழிகள் சாத்வீகனையும் காதல் கொளளச்செய்தது.அமுதாவின் விழிகளே கோபம் கொண்டாலும் அழகாய் தெரிந்தது.மனம் அவளை விரும்பினாலும் புத்தி அவள் எதிரிநாட்டவன் காதலி அவளுக்கும் தன் நாட்டை இழந்ததில் அவளுக்கும் பங்குள்ளது என்பதுரைத்தது.அப்படியும் அவ்வழகியை அன்பே என அழைத்துவிட்டான்.

'அன்பே'என்ற வார்த்தையை கேட்டதும் அமுதாவின் முகம் கோபத்தில் கொப்பளித்தது.

நாட்டையும் ,தந்தையையும் இழந்தவனின் மனம் பலிதீர்க்கத்தான் அமுதவர்த்தினியை கடத்திவந்தான் ஆனால் அவளின் மான் விழியானது அவன் மனதை தன் அம்பால் தைத்து காதல் நோயை உண்டாக்கியது.

அன்றிரவு சாத்வீகனால் தூங்க இயலவில்லை,அவன் மனம் கார்முகிலனை கொன்றுவிட்டு அமுதவர்த்தினியை தன் பட்டத்து இளவரசியாய் மாற்றி தன் நாட்டையும் கைப்பற்றிட எண்ணியது.அவன்  இரவு உறக்கத்தே "அமுதா அமுதா"எளப்பிதற்றினான்.

மறுநாள் காலை புலர்ந்ததும் அமுதவர்த்தினியை பணிப்பெண்களிடம் வளமாக சிறப்போடு கவனிக்குமாறு கட்டளைவிடுத்தான் சாத்வீகன்.

அவளுக்கு முக்கனிகளோடு சிறப்பான உணவுகள் கொடுக்கப்பட்டது ஆனால் அமுதவர்த்தினி எதையும் ஏற்காது பட்டினியோடு தவம் புரிந்தாள்"இவைகளை எடுத்துச்சென்று புறமுதுகிடும் உம் இளவரசனுக்கு கொடுங்கள்"என கத்தினாள் இளவரசி.

இதைப்பணிப்பெண்கள் சாத்வீகனிடம் பொருளுரைத்தனர்"மன்னா இளவரசி உண்ணாநோன்பிருக்கிறார்"என நடந்தவற்றை விவரித்தனர்.

"ஓ....இத்தனை திமிரா அப்பெண்மகளுக்கு நானே அவ்விடத்திற்கு வருகிறேன்"என சினம் கொண்டு அவ்விடத்தை நோக்கினான் சாத்வீகன்.

அமுதாவின் குடில் நோக்கி வந்த சாத்வீகன்"என்னை அவதூராய் பேசிய உம்மையே என் பட்டத்துராணியாக்குவேன்"என்றான் சாத்வீகன்.

"வாழ்ந்தால் கார்முகிலனின் மனைவியாக வாழ்வேனேயன்றி வீழ்ந்திடுவேன்"என்றாள் அமுதவர்த்தினி.

"அந்த கயவனிடம் என்ன இருக்கிறதென்று அவனிடம் இத்தனை காதல் கொண்டுள்ளாய்,என் மகாராணியாய் மாற ஏனோ மறுக்கிறாய்?"என்றான் சாத்வீகன்.

அமுதாவின் சமயோஜித புத்தி அங்கே இடம்தந்தது அவள் தன் கண்களை துடைத்தாள்"கார்முகிலனின் வீரம்தான் என்னைக்கவர்ந்தது...அவனை
நேருக்குநேர் நீ வென்றாயானால் நான் உன் மனைவியாக ஒப்புக்கொள்கிறேன்"என்றாள்.

"ஹாஹாஹா...பலே பலே இதுவல்லவா கோரிக்கை,விரைவில் இந்த வாளால் அவன் கதைமுடித்து உன் கரம்பற்றிடுவேன் பெண்மயிலே"என்றவண்ணம் தன் கூறிய வாளால் அவள் முகட்டுவாயை தூக்கிநிறுத்திக்கூறினான் சாத்வீகன்.

அமுதா நன்கறிவாள் தன்னவன் தன்னை காப்பாற்ற வீரத்தோடு போர்புரிவானென்று. தங்களின் காந்தர்வதிருமணத்தின் சாட்சியான காளியிடம் தன்னவனை காணவேண்டுமென தவம் புரிந்தாள். அமுதாவின் கண்கள் நீர்நிரம்பிய கண்ணீர் குளமாய் பெருக்கெடுத்தது.

அங்கே இருந்த சோலை சூழப்பட்ட இடத்தினில் அழகழகான குடில்கள் அமைக்கப்பெற்றிருந்ததை கண்டான் கார்முகிலன்.சிலர் அங்குமிங்கும் செல்வதைக்கண்டவனுக்கு இது சாத்வீகன் இடமென்று புலப்பட்டது.

எதிரியை தோற்கடிக்க நல்லபொழுதை நோக்கி காத்திருந்தான் கார்முகிலன்.மெல்ல தன் வாளை உறைக்குள்ளிருந்து எடுத்தவன் அங்கே நின்றிருந்த சாத்வீகனைக்கண்டான்" ஓ இவையெல்லாம் உன் நாசவேலையா,ஆட்டினை தீர்த்துகட்டிய நான் எப்படி குட்டியை விடுத்தேன்,உனக்கு வேலை வந்ததுவிட்டது"என்று மனதில் நினைத்தவண்ணம் உறைக்குள் வாளை வைத்தான்.மரத்தின் மீதேறியவன் அங்கே நடப்பவற்றை கண்களால் நோட்டமிட்டான். அவன் கண்கள் அமுதாவை நோட்டமிட்டது.அங்கொரு இடத்தில் அமுதாவின் நீண்ட கூந்தலும் அவளென கார்முகிலனுக்கு குறிப்புணர்த்தியது.மெல்ல பதுங்கிச்சென்றவன் அங்கே கானமற்ற குயிலாய் சுரத்தையற்று அமர்ந்திருந்தவளைக்கண்டதும் அவன் மனம் ஏங்கியது.

கார்முகிலனின் மனம் அவளை நாடியது.மெல்ல சாத்வீகன் இருக்குமிடத்தை அடைந்தான் கார்முகிலன்.

"மானம் கெட்டவனே நேருக்கு நேர் போர்புரிந்திட தயக்கம் கொண்டதாலோ எம் பெண்மானை சிறைவைத்தாயோ?"என்றான் நேருக்கு நேராக நின்றவண்ணம் கார்முகிலன்.

புறமுதுகிட்டு செல்வது வீரனுக்கு அழகில்லையே....நேருக்கு நேராய் போர்புரியத்தயாரானான் கார்முகிலன்.

"வாராய் கார்முகிலா...உனக்காகத்தான் யாமும் எம் வாளும் காத்திருந்தோம்...யாரங்கே அமுதவர்த்தினியை கார்முகிலன் வந்தானென அழைத்து வாருங்கள்"என்றான் சாத்வீகன்.

தன்னவன் வந்துவிட்டான் என்பதறிந்த அமுதவர்த்தினி அவனைக்காண ஓடோடி வந்தாள்.

அவளை நெருங்கிய கார்முகிலன் அவள் கன்னங்களை தன் கைகளால் ஏந்தினான் அமுதவர்த்தினியின் கண்கள் நீரை சொரிந்தது.அதற்குள் அவன் கழுத்தில் வாளை வைத்தவண்ணம் பேசத்தொடங்கினான் சாத்வீகன்.

"எல்லாம் இருக்கட்டும் என்னுடன் வாள்போரிட்டு அவளை நீ எடுத்துசாசெல்....யார் வெல்கிறார்களோ அவருக்கே அமுதா சொந்தமாவாள்"என்றான் சாத்வீகன்.

இரத்தம் கொதிக்க கண்கள் சிவக்க "உன் தலையை சிதைத்து இக்கணமே கொன்றிடுவேன்...என்னவளை உன்வசமாக்க நோக்கம் கொண்டாயோ?"என்றான் கார்முகிலன்.

"இது உம் காதலி உடன்பட்டு ஏற்றுக்கொண்ட சத்தியபிரமாணம் அறிவீரோ?"என்றான் சாத்வீகன்.

அங்கிருந்த அமுதாவை நோக்கியது கார்முகிலனின் கண்கள்.

"ஆம் மன்னவா இந்த கயவன் தமக்கு சொந்தமாகபோகின்றவள் என்பதறிந்தே எம்மை கவர்ந்து வந்துள்ளான்.எனவே இவ்விடத்தே போர்புரிந்து அவனை வென்று எம்மை அழைத்துச்செல்வீராக!"என்றாள் அமுதவர்த்தினி.

தன்னவள் கூறியதன் காரணம் அறிந்தவன்
அவனோடு போர்புரியத்தயாரானான்.

"என் அன்பு காதலியே இவனை வென்று உம்மை என் வசமாக்கிச்செல்வேன்,இதுவே உன் மீது யாம் கொண்ட காதலின் மேல் சத்தியம்"என்றவன் உறைவாளை உருவினான் கார்முகிலன்.

சாத்வீகனின்  போரில்மீண்டு எஞ்சிய படைவீரர்கள் ஒன்றென திரண்டனர் இளவரசனைக்காக்கும் பொருட்டு.

"வீரர்களே அங்கேயே நில்லுங்கள்...இப்போரானது எமக்கும் அவ்வெதிரிநாட்டவனுக்கும் உண்டானது ,எனவே தனித்து போராடி நம் நாட்டையும் இப்பஞ்சவர்ணக்கிளையையும் வெல்வேன்"என்றான் சாத்வீகன்.

தன்னவளை வர்ணிப்பது பொறுக்காது மேலும் சினம்கொண்டான் கார்முகிலன்.அமுதவர்த்தினியின் வாழ்வு இதில் பணயமாய் இருப்பதன் பொருட்டு வேகமாக வாளை வீசினான் கார்முகிலன்.

சாத்வீகன் வீசிய வாளானது கார்முகிலனின் தோளில் தீண்டி இரத்தம் வழிந்தது.அதைக்கண்ட அமுதவர்த்தினி கண்ணீர்வடிக்கத்தொடங்கினாள்"ஐயகோ யான் என்ன செய்வேன்,என்னவன் உடல் வாள்பட்டு இரத்தம் வீறுகொண்டு வருகிறதே"எனக்கதறினாள்.

அவன் நிலைகுலைந்ததாய் எண்ணிய சாத்வீகன் நயவஞ்சக பார்வையோடு காலால் இடற முற்பட அப்படியே அவன் காலை தன் கைகளால் யாரும் பாராவண்ணம் இடறினான் கார்முகிலன்.சாத்வீகன் அப்படியே நிலைகுலைந்துவிட்டு எழுந்தான் .இரண்டு வாட்களும் உராய்ந்து தீப்பொறியை உண்டாக்கியது .இறுதியில்   கார்முகிலனின் வேகத்தை ஈடுசெய்ய இயலாது வாளை  கீழே விட்டான் சாத்வீகன்.கார்முகிலனின் வாள் சாத்வீகனின் கழுத்துக்கு வந்தது.தோல்வியை ஒப்புக்கொண்டான் சாத்வீகன்.

"எம்நாட்டை கவரும்பொருட்டு உம் தந்தை வந்ததால்தான் இவ்விளைவு...உன் கதையை முடித்திடத்தான் ஒற்றனை நீயிருக்குமிடம் கண்டுவரக்கட்டளையிட்டேன்...எப்படியோ தப்பிவிட்டாய்,இக்கணமே உம்மை சிறையிலிடுகிறேன்"என்ற கார்முகிலனை நெருங்க படைவீரர்களும் அஞ்சினர்.அவன் வீரத்திருமகனன்றோ அவன் பக்கம் யாரேனும் திரும்பிட இயலுவது கடினம்தானே.

அவளின் ஈரவிழிகள் தன்னவன்மீதுகொண்ட காதலால் கண்ணீர் பொழிந்தது.அவளின் கட்டுகளை அவிழ்த்தவன் பெண்ணவளை ஆரத்தழுவிக்கொண்டான்.அந்த மென்மையான அணைப்பு அவளை கரையச்செய்தது.

அதற்குள் கும்பகை வீரர்கள்  சாத்வீகனையும் அவன் படைகளையும் சிறையெடுத்துச்சென்றனர்.

அவளைத்தன் குதிரையின் முன் ஏற்றியவன் தன்னவளை அணைத்தவண்ணம் மகிழ்வோடு கும்பகை நோக்கிச்சென்றான்.

கார்முகிலன்_அமுதவர்த்தினியின் வருகையை கண்ட  தர்மினி மகிழ்வோடு ஆரத்தி எடுத்தாள்.தர்மினியும் அமுதவர்த்தினியும் ஒருவரையொருவர் ஆரத்தழுவினர்.தங்கள் மகளைக்கண்டதும் தனஞ்செழியனும் அன்னமயிலும் உள்ளம்  மகிழ்ந்தனர்.

இருவருக்கும் குறித்த அந்நன்னாளில் திருமண வைபவத்தில் மணமகளாக  மணக்கோலம் பூண்டு வந்தாள் மங்கையவள்.இவள்விழி தன் மன்னவனின் வசமாகிப்போனது.அந்த கயல்விழியை கண்ணீரின்றி காலந்தோறும் பார்த்துக்கொள்வதாக அவள் கழுத்தில் அக்னிதேவன் சாட்சியாக மங்கலநாணிட்டு திருமணம் செய்துகொண்டான் கார்முகிலன்.பெற்றோர்கள் உள்ளம் மகிழ திருமணம் முடிந்தது.

தர்மினி தன் தோழிக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தாள்.

வைரமும் வைடூரியமும் பதித்த பல்லக்கில் வதன தேசத்திற்கு அழைத்து வரப்பட்டாள் அமுதவர்த்தினி.அவர்களை ஆரத்தியெடுத்து,மலர்தூவி வரவேற்றனர் அந்நாட்டுமக்கள்.

அன்றிரவு "என் மனதை கொள்ளைகொண்ட விழியை கொண்டவளே... என்றென்றும்  நீ என் வசமாகுக"என்று கார்முகிலன் அவள் மெல்லிடை பற்றினான்.

காதலோடு இருவிழிகளும் கண்களால் உறவைத்தொடங்கியது.அன்பான அவளின் விழிகளால் கார்முகிலனின் மனம் கொள்ளைகொள்ளப்பட்டது.

"விழியோடு விழி பேசிடும் தருணத்தே
உயிரோடு உயிராக உடலால் ஒன்றாகி
விழிகளில் தொலைந்து விழிகளை மீட்டெடுத்த காதல்  ஒலித்தது
சங்கீதத்தின் ஸ்வரமாய்!
மைவிழியாள் மனம்கரைந்து
மன்னவனை ஆட்கொண்டாள்
அவ்விழிப்பார்வையாலே!
அவளோ கூடலில் களித்து தன் மன்னவனின் அணைப்பில் துயில்கொண்டாள் மங்கையவள்!
காதல் பெருகி கனிந்தது
அவள் இவன் வசமாகிப்போனாள்!
கண்களில் தொடங்கிய இதழ்தேன் சுவைத்த காதல் இன்று இனிமையாய்
வென்றது கூடலில் களித்திட்டே!"

                   💐💐💐முற்றும்💐💐💐


கருத்துகள்